×

பொங்கல் திருநாள் இன்று உற்சாக கொண்டாட்டம் புத்தாடை, கரும்பு, மஞ்சள் வாங்க குவிந்த பொதுமக்கள்: கடைவீதிகளில் அலைமோதிய கூட்டம்

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகை இன்று உற்சாகமாக  கொண்டாடப்படும் நிலையில் வீட்டிற்கு தேவையான கரும்பு, மஞ்சள் மற்றும்  புத்தாடைகள் வாங்க பொதுமக்கள் குவிந்ததால் கடைவீதிகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. மேலும் பொங்கல் பண்டிகையை கொண்டாட  தமிழகம் முழுவதும் சுமார் 6 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றுள்ளனர். தை திங்கள் முதல் நாளான இன்று புத்தாடை அணிந்து, விதவிதமாக வீடுகளில் வண்ண  கோலமிட்டு, தோரணம் கட்டி, கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றுடன் பொங்கல்  பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, புதுப்பானையில் புத்தரிசியிட்டு  பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.

சென்னை தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளிக்கடைகளில் நேற்றும் கூட்டம் அலைமோதியது. கரும்பு, மஞ்சள் வாங்க நேற்று பொதுமக்கள் கடைகளில் குவிந்தனர். 20 எண்ணிக்கை கொண்ட  ஒரு கரும்பு கட்டு கோயம்ேபடு மார்க்கெட்டில் ரூ.400 வரை விற்கப்பட்டது.  இதே கரும்பு ஊர்களில் ரூ.500க்கு விற்கப்பட்டது. அதன்படி ஒரு கரும்பு ரூ.25  முதல் ரூ.30 வரை விற்பனையானது.பொங்கல் பண்டிகையை தங்களுடைய குடும்பத்துடன் கொண்டாடும் வகையில் தென்மாவட்டத்தை சேர்ந்த மக்கள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாகவே சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கினர். அதாவது,  3 நாட்களில் தினசரி  இயக்கப்படும் 6,300 பஸ்களுடன்,  சென்னையில் இருந்து 4000 சிறப்பு பஸ்கள்  மற்றும் பல்வேறு முக்கிய இடங்களில்  இருந்து என 6468  சிறப்பு பஸ்கள் என  மொத்தம் 16,768 பஸ்கள் இயக்கப்பட்டன. ஆம்னி  பஸ்களிலும் கூட்டம்  அதிகமாக இருந்தது.  பொங்கல் பண்டிகைக்காக ரயில்  மற்றும் பஸ்கள் மூலமாக சுமார் 6  லட்சம் பேர்  சொந்த  ஊர்களுக்கு சென்றனர்.

வழக்கமாக  பொங்கல் பண்டிகை முடிந்து, அடுத்த நாள் மாட்டுப்பொங்கல், தொடர்ந்து காணும்  பொங்கல் என்று மக்கள் விமரிசையாக கொண்டாடுவர். இதை கொண்டாட பொதுமக்கள்  சுற்றுலாத்தலங்களை நாடுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக  சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மேலும் கூட்டமாக  செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், காணும் பொங்கலை வீட்டிலேயே  கொண்டாடுமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, கடற்கரை,  பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல தமிழக அரசு 15ம் தேதி முதல் 17ம் தேதி  வரை தடை விதித்துள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில்,  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகள்  நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. மதுரை மாவட்டத்தில், நாளை அவனியாபுரம், 15ம் தேதி பாலமேடு, 17ம் தேதி அலங்காநல்லூரில்  ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா தொற்று  பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சில விதிகளை வகுத்து,  மாவட்டத்தில் 3 ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடத்தப்படவுள்ளது. ஜல்லிக்கட்டு  காளை மற்றும் மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும்.  ஒவ்வொரு போட்டியிலும், 300 மாடுபிடி வீரர்களும், பார்வையாளராக  150 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். உள்ளூர் மக்கள் மட்டும்  கலந்து கொள்ளலாம். வெளியூர் மக்களுக்கு அனுமதி இல்லை. ஜல்லிக்கட்டு  தொடர்பாக மாடுபிடி வீரர்கள், காளைகள் பதிவு செய்யும் பணி துவங்கியது. நேற்று முன்தினம் மாலை வரை இந்த பதிவு நடந்தது. இதன்படி  நேற்று முன்தினம் மாலை வரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர்  ஜல்லிக்கட்டுகளுக்காக 4,534 காளைகள் முன்பதிவு  செய்யப்பட்டுள்ளன.

இதேபோல், 1,999 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு  செய்துள்ளனர். இன்று நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில்  700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். மாடுபிடி வீரர்கள்,  மாட்டின் உரிமையாளர்கள் ஆன்லைனில் பதிவு செய்தனர். இவர்களுக்கு டோக்கன்  வழங்கப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்,  உதவியாளர்களுக்கு மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை தலைவர் ராஜா தலைமையில் 5  குழுவினர் கொரோனா பரிசோதனை செய்தனர். மேலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் இன்று,  15 மருத்துவ குழுவினர் மாடுபிடி வீரர்களை உடல் தகுதி பரிசோதனை செய்து  பின்னர் அவர்களை 50 வீரர்களாக ஒவ்வொரு சுற்றுக்கும் களம் இறக்க உள்ளனர். காயம் அடைபவர்களுக்கு சிகிச்சை அளிக்க முதல் உதவி மையம் மற்றும் மேல் சிகிச்சை அளிக்க 11 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளன. ஜல்லிக்கட்டு விழாவை அரசு ஏற்று நடத்துகிறது. ஜல்லிக்கட்டை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைக்கிறார்.

கரும்பு, மஞ்சள் வரத்து அதிகரிப்பு
சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மொத்த  வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது: பொங்கல் பண்டிகையையொட்டி கோயம்பேட்டில் கரும்பு விற்பனை களை கட்டியுள்ளது. தேனி, பண்ருட்டி, மதுரை, வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து  60 லாரிகளில் கரும்பு லோடு வந்துள்ளது. இதில் தேனி கரும்பு ஒரு  கட்டுக்கு ரூ.400க்கும், மற்ற மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள  கரும்பு ஒரு கட்டுக்கு ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையாகிறது. இதேபோன்று ஒரு குலை மஞ்சள் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது. வியாபாரம் அமோகமாக இருந்தது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Pongal Thirudu ,New Year ,Cane ,Yellow Buy , Pongal Thirunal, Buttadai, Sugarcane, Yellow, Public, Shopping,
× RELATED மின்னொளியில் புனித சூசையப்பர் ஆலய சப்பர பவனி கோலாகலம்